வழக்கமாக காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு இயக்கப்படும். இதன் மூலம் வழக்கமான வருவாயை விட இரண்டு மடங்கு வருவாயை போக்குவரத்து கழகம் ஈட்டும். ஆனால், இந்த ஆண்டு மாநகர போக்குவரத்து கழகம் காணும் பொங்கலன்று 3 கோடி ரூபாய் இழக்க நேரிடும் என்று போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு இந்த பண்டிகையின்போது, மாநகர போக்குவரத்து கழகம் 480 சிறப்பு பேருந்துகளை முக்கிய சுற்றுலா தளங்களான மெரினா கடற்கரை, வண்டலூர் விலங்கியல் பூங்கா, கிண்டி தேசிய பூங்கா, சேத்துப்பட்டு பசுமை பூங்கா, மாமல்லபுரம் மற்றும் ஒரு சில இடங்களுக்கு இயக்கியது. அதன் மூலம் 3 கோடிக்கு மேல் வருவாய் பெற்றது என்று தெரிவித்தார்.
பேருந்து நடத்துநர் ஒருவர் கூறுகையில், காணும் பொங்கல் பண்டிகையன்று எல்லா நகர பேருந்துகளிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு எண்ணிக்கை 10 நபர்களுக்கு மேல் இல்லை என்று கூறினார்.
வெறிச்சோடிய மெரினா
காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் மட்டும் 3 முதல் 4 லட்சம் வரை மக்கள் கூடுவார்கள். இதனால் மெரினாவில் கடை வைத்துள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பெரிதளவு பாதிக்கப்பட்டு இருக்கிறதே என்று சொல்லலாம்.
இதேபோல, மக்கள் அதிகமாக கூடும் தளங்களான வண்டலூர் வனவிலங்கு பூங்கா மற்றும் மாமல்லபுரம் கோடிக்கணக்கில் வருவாயை இழந்தது. வண்டலூர் வனவிலங்கு அலுவலர் கூறுகையில், இந்த பூங்காவில் லட்சக்கணக்கான பயணிகள் இந்த பண்டிகையன்று வருகை தருவார்கள். இதனால், வருவாய் இந்த ஒரு நாளில் மட்டும் 1 கோடிக்கு மேல் வருவாய் வரும். ஆனால் அரசின் ஆணைப்படி பூங்கா மூடப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை சேத்துப்பட்டு பூங்காவும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.