காஞ்சிபுரம்: புத்தாண்டையொட்டி பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். புத்தாண்டு அன்று கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
அந்தவகையில், கோயில் நகரமான காஞ்சிபுரத்திலுள்ள உலக பிரிசித்தி பெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், அத்தி வரதர் புகழ் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில், குமரகோட்டம் முருகன் கோயில், கச்சபேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக கரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இந்து சமய அறநிலையத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், பக்தர்கள் அதிகளவில் கூடும் பிரிசித்தி பெற்ற கோயில்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடவுள்ளனர்.
இன்று காலை 6 மணியிலிருந்து பொதுமக்களும், பக்தர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வழக்கம்போல் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கும் புத்தாண்டு ராசி பலன்