ஸ்ரீபெரும்புதூர்: தைவான் நாட்டை சேர்ந்தவர் நி சியா சியாங் (Ni Chia Hsiung). காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளார். சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், பணி முடிந்து நி சியா சியாங் வீடு திரும்பிய நிலையில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டினுள் சென்று பார்த்தவருக்கு கூடுதல் அதிர்ச்சியாக 16 லட்ச ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், 35 சவரன் தங்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நகை உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை சோதனை செய்தனர். சோதனையில் இரு மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று லாக்கர் பெட்டிகளை எடுத்து சென்றது தெரியவந்தது.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றிய போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அதேநேரம் தற்போது திருடுபோன வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் கடந்த 4 மாதங்களுக்கு முன் இதேபோல் திருட்டு நடந்துள்ளது.
நகை மற்றும் பணம் திருடு போன நிலையில், தற்போது மேலும் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க: Exclusive: 'வாரிசு' ஷூட்டிங் ஸ்பாட்டில் 5 யானைகள் சர்ச்சை.. வனத்துறை அமைச்சரின் பதில் என்ன?