காஞ்சிபுரம்: கரோனா விதிமுறைகளை தொடர்ச்சியாக மூன்று முறை மீறும் வணிக நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் எல். சுப்பிரமணியன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து அனைத்து அரசு அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி பிப்ரவரி மாதத்தில் 0.6 சதவீதமும் மார்ச் மாதத்தில் அது உயர்ந்து ஒரு சதவீதமாக இருந்த நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் 2 சதவீதமாக பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை 8 லட்சத்து 65 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 31,943 பேர் பாதிக்கப்பட்டு 30,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கரோனா விதிமுறைகளை மீறி தொடர்ச்சியாக மூன்று முறை அபராதம் செலுத்தும் வணிக நிறுவனங்களை மூடி சீல் வைக்கப்படும். முகக்கவசம், தகுந்த இடைவெளியை கடைபிடிக்காத வகையில் செயல்பட்ட அவர்களிடமிருந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா , இணை இயக்குனர் மருத்துவர். ஜீவா மற்றும் ஊரக நலப்பணிகள் பொது சுகாதார துறை துணை இயக்குனர் பழனி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.