தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் நன்னடத்தை விதிகளின்கீழ் பறக்கும் படையினர் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில், தோட்டக்கலைத் துறை அலுவலர் கோமதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஆரணியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களைச் சோதனையிட்டதில் முறையான ஆவணங்களின்றி 78 ஆரணி பட்டுப் புடவைகளை எடுத்துவந்தது தெரியவந்தது.
அதையடுத்து இதனைப் பறிமுதல்செய்து காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெ. ராஜலட்சுமியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பறிமுதல்செய்யப்பட்ட ஆரணி பட்டுப் புடவைகளின் மதிப்பு சுமார் 46 ஆயிரத்து 800 ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.