காஞ்சிபுரம்: வையாவூர் ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் உடனே ஏரியை சுத்தப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வையாவூர் கிராமம், புறநகர் வளர்ச்சியில் பெரிதும் பொதுமக்களை கவரும் பகுதியாக உள்ளது. இக்கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது வையாவூர் ஏரியாகும்.
கடந்த இரு தினங்களாக ஏரியின் நீர்மட்டம் குறைவதாலும், கடும் கோடை வெயில் தாக்கத்தாலும் ஏரியில் இருக்கும் மீன்கள் செத்து மிதந்து கரையோரம் குவிந்துள்ளன. இதனை உண்பதற்காக எடுத்துச் செல்லும் பறவைகள் அதை கிராமப் பகுதியில் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றன. மேலும் துர்நாற்றம் அதிகளவில் வீசுவதால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இக்கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியில், தற்போது மீன்கள் செத்து மிதப்பதால் குடிநீர் பிரச்னை வருமோ என மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இதனால் உடனே ஏரியை சுத்தப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மனிதநேயம் மறந்த மருத்துவமனைகள்: அவசர ஊர்தியிலேயே உயிரிழந்த கர்ப்பிணி