காஞ்சிபுரம் அடுத்து புளியந்தோப்பு பகுதியைச்சேர்ந்தவர் தாமோதரன் (வயது 38). இவரும் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சபரீஷ் ஆகிய இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சம்பத் என்பவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுபேசினார்.
அப்போது, ’செங்காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளை மிரட்டிப்பணப்பறிப்பில் ஈடுபட்டு வர்றீங்க. உங்க மீது தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் வருகிறது. உன் மீது வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால், எனக்கு பணம் அளிக்க வேண்டும்’ என இருவரும்(தாமோதரனும் சபரீஷும்) சம்பத்தை மிரட்டி உள்ளனர்.
இதையடுத்து சம்பத்தை தண்டலம் பகுதிக்கு வரவழைத்து பேரம் பேசி ரூ.7 லட்சம் பணத்தை அளிக்கும்போது தாமோதரன், சபரீஷ் ஆகிய இருவர் மீதும் சம்பத்துக்கு சந்தேகம் எழுந்தது. பணத்தை அளித்த பின்னர் இது குறித்து சம்பத் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தாமோதரனின் செல்போன் எண்னை ஆய்வு செய்து பூந்தமல்லி அருகே தலைமறைவாக இருந்து வந்த தாமோதரனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் தாமோதரனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் ரூ.7 லட்சம் பணத்தில் ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை உல்லாசமாக செலவிட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவரிடம் மீதம் இருந்த பத்தாயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சபரீஷ் என்பவரை போலீசார் வலை வீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. வழக்கறிஞர் பகீர் தகவல்