காஞ்சிபுரம்: ரவுடி பிபிஜிடி சங்கர் மீது காவல் துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆள்கடத்தல், கொலை, நில அபகரிப்பு உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் மூன்று வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. ரவுடி சங்கர் பாஜகவில் மாநிலப் பட்டியலின அணிப் பொருளாளராக உள்ளார்.
தற்போது ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் என்ற ஊராட்சிக்குத் தலைவராகவும் இருந்துவருவதாகத் தெரியவந்துள்ளது. ரவுடி சங்கர் பலரிடமிருந்து நிலத்தை அபகரித்து சட்டவிரோதமாகத் தனது பினாமி பெயரில் சொத்துகளைக் குவித்திருப்பது அமலாக்கத் துறையினருக்குத் தெரியவந்தது.
இதனையடுத்து அமலாக்கத் துறையினர் சங்கருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல்செய்தனர். இதில் நிலம் வைத்திருப்பவர்களை மிரட்டி நிலத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பெற்று சட்டவிரோதமாகப் சம்பாதித்த பணம் மூலம் அந்த நிலத்தை பினாமி பெயரில் சொத்தாக வாங்கிக் குவித்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
அவ்வாறாகக் குவிக்கப்பட்ட பல்வேறு சொத்துகள் குறித்தும் சொத்துகளை வாங்குவதற்கான பணம் மூலதனம் குறித்தும் விசாரணை நடத்தியபோது ரவுடி சங்கர் தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என அமலாக்கத் துறை தரப்பில் கூறப்படுகிறது.
சட்டப்பூர்வமான நேரடித் தொழில் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணத்தை வைத்து சொத்துகள் வாங்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.
நிலம் வைத்திருப்பவர்களிடமும் ஆள்களை வைத்து மிரட்டியும், கண்காணிக்கப்படாத ஆளில்லா நிலங்களை அபகரித்ததன் மூலம் சேகரிக்கப்பட்ட சொத்துகள் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 79 சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காவல் துறை விசாரணையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக சொத்துகளை வாங்குவதற்குப் பணம் கொடுத்தாலும், காவல் துறையினரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க பினாமி பெயரில் சொத்துகளை வைத்திருந்ததாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அறிவாலயத்தில் பணியின்போது காயமடைந்த காவலர் - ஸ்டாலின் ஆறுதல்