தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி பல்வேறு ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முதற்கட்டமாக அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் குறித்த வரைவுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டன.
இந்த நேரத்தில் மாவட்டங்கள் தோறும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதால், காஞ்சிபுரத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார்.
இதில் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, நடந்துமுடிந்த தேர்தல்கள் நமக்கு பல்வேறு அனுபவங்களைத் தந்த போதும், உள்ளாட்சித் தேர்தல் என்பது மிகக் கவனத்தில்கொள்ள வேண்டிய ஒரு தேர்தலாகும். எனவே, இதைத் திறம்பட அனைத்து தேர்தல் அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். இது குறித்த சந்தேகங்கள் ஏற்படும் நிலையில் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அதனைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.