கரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு தொழில்துறைகளை பாதித்துள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவுவதை தடுக்க இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் மார்ச் மாதம் கல்வி நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. பாடங்களை நிறைவு செய்ய வேண்டிய கால கட்டமிது. இதனைத் தொடர்ந்து தேர்வுகள் அணிவகுக்கும். இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பால் பல கல்வி நிலையங்கள் சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் சென்னை அருகே உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி இந்த சவாலையே ஒரு நல்ல புத்தாக்கத்திற்கான வாய்ப்பாக கொண்டு புது முயற்சியை முன்னெடுத்துள்ளது.
தற்போது மாணவர்களுக்கான பாடங்களை ஆன்லைன் முறையில் இந்நிறுவனம் கற்பிக்கிறது. செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்ட்டலிஜென்ஸ்) உதவியுடன் அதிநவீன கேமராக்கள், மைக்குகள் மூலம் ஆசரியர் பாடம் நடத்தும் மெய்நிகர் வகுப்புகளின் (vurtual class) காட்சிகள் வீடுகளில் உள்ள மாணவர்களை சென்றடைகின்றன. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் காட்சிகளை பதிவு செய்து வைத்துக்கொண்டு பின்னர் பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மொபைல் ஆப் மூலமும் இவற்றை பதிவிறக்கம் செய்து பார்க்கவும் முடியும்.
பயனாளர்களின் இணையதள திறன் (பேண்டுவிட்த்) நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்ப வீடியோ தரத்தை மேம்படுத்தும் வசதியும் இந்த ஆன்லைன் கல்வி முறையில் உள்ளது. இம்முறையில் மாணவர்கள் தங்கள் கேள்விகளை நேரடியாகவோ, அல்லது தனிப்பட்ட முறையிலோ ஆசிரியர்களிடம் கேட்க முடியும்.
நெருக்கடியான இந்த சூழலில் மெய்நிகர் வகுப்புகள் மாணவ சமுதாயத்துக்கு பெரும் பயன் தருவதாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் பலன் பெறுவதுடன் தங்கள் கல்லூரி பிற கல்வி நிறுவனங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றது என ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் எம்.அபய் ஷங்கர் மேகநாதன் கூறுகின்றார்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர்.எஸ்.என் முருகேசன் கூறுகையில் மாணவர்களின் நலனையே தங்கள் பிரதான கொள்கையாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் தங்கள் கல்லூரி நடத்திவரும் மெய்நிகர் வகுப்புகள் நல்ல பலன் தருகின்றது என பின்னூட்டங்கள் (feed back) வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.