காஞ்சிபுரம் மேட்டு தெரு பகுதியில் பேக்கரி ஒன்று இயங்கிவருகிறது. இதன் அருகாமையிலே அரசு டாஸ்மாக் கடையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைக்கு மதுபானங்களை வாங்க வந்த வினோத், எழிலரசன் ஆகிய இருவரும் போதை தலைக்கேறிய நிலையில், பேக்கரியின் உள்ளே நுழைந்து இரண்டு பப்ஸ் வேண்டும் என பேக்கரி உரிமையாளரான இளங்கோவனிடம் கேட்டுள்ளனர்.
பேக்கரி உரிமையாளர் இவர்கள் இருவரும் மது போதை தலைக்கேறிய நிலையில் இருப்பதை அறிந்து முதலில் பணத்தை கொடுங்கள் பின்னர் பப்ஸ் தருகிறேன் என கூறியுள்ளார். இதையடுத்து என்னிடமே பணம் கேட்கிறாயா என்று வினோத் பேக்கரி உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அப்போது எழிலரசன் பேக்கரியில் இருந்த கத்தியை எடுத்து பேக்கரி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தங்களுக்கு பணம் வேண்டும் எனவும் இருவரும் மிரட்டி உள்ளனர். இதனையடுத்து சிறிது நேரத்தில் பேக்கரியில் வாடிக்கையாளர் வருவதை அறிந்ததும் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த தாக்குதலில் காயமுற்ற பேக்கரி உரிமையாளர் இளங்கோவன் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து இளங்கோவன் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மது போதையில் தகராறில் ஈடுபட்ட வினோத், எழிலரசன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேக்கரி உரிமையாளரை இருவரும் சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ஒரு ஆம்லெட்டை இரண்டு இலையில் கேட்ட போதை பாய்ஸ்: தராததால் அடிதடி!