சிறுபான்மையினர் - ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமைச் சட்டத்தின் மூலம் துரோகம் செய்யும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காந்தி ரோடு தேரடியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டட்த்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், ”குடியுரிமை சட்டத்திருத்ததைத் திரும்பபெற வேண்டும். இன்று இந்தியா பற்றி எரிவதற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்கு செலுத்தியதுதான் காரணம். சிறுபான்மையின மக்களுக்கும், ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் கொத்தடிமை ஆட்சி மட்டுமல்ல, கொத்தடிமை கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. மத்தியில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அதனை பாஜக ஆட்சி என்கிறோம். ஆனால் அது பாஜக ஆட்சி அல்ல. பொதுமக்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தும் ஆட்சி. மதச்சார்பற்ற நாடு என்ற சொல்லுக்கு ஏற்ப இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தோர் பல ஆண்டு காலமாக வாழ்ந்துவருகிறோம். அதில் விஷம் கலக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை சர்வாதிகாரப் போக்கில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர். சிறுபான்மை மற்றும் இஸ்லாமிய மக்களை நசுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது. நாளை திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: பொய் குற்றச்சாட்டில் தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு - திமுக மீது ஓபிஎஸ் சாடல்