திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராம்கி. இவர் தனது இருசக்கரவாகனத்தில் சென்னையிலிருந்து ஆரணி நோக்கி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.
அப்போது சின்னையன் சத்திரம் அருகே வரும்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்த ராம்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அச்சமயம், சென்னையிலிருந்து பணி முடிந்து வந்து கொண்டிருந்த காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி தனது காரை நிறுத்தி நெடுஞ்சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராம்கியை மீட்டு முதலுதவி அளித்தார்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு கால தாமதமாகும் என்பதால், உயிருக்கு போராடிய ராம்கியை தனது காரிலேயே ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மேலும் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.
உயிருக்குப் போராடிய நபரை துரிதமாக மீட்டு, ஆம்புலன்ஸிற்காக காத்திருக்காமல் தனது காரிலேயே ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த டிஐஜி சாமுண்டீஸ்வரியின் செயலை, நெடுஞ்சாலையில் நேரில் பார்த்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: சென்னையில் தீவிரவாதி கைது!