காஞ்சிபுரம்: ஆபத்தான நிலையிலுள்ள குடிநீர் தொட்டியை முழுவதுமாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் பெரு நகராட்சி உள்பட்ட 46ஆவது வார்டு கண்ணகிபுரம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி சேதமடைந்த நிலையில், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. மேலும் இந்த குடிநீர் தொட்டி ஆபத்தான முறையில் இருப்பதாகக் கூறி, அதனை அகற்ற காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சில தினங்களுக்கு முன்பு குடிநீர் தொட்டியினை அகற்றும் பணியை பெரு நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு, முழுவதும் அகற்றாமல் ஆபத்தான முறையில் பாதியிலேயே விட்டு சென்றுள்ளனர்.
இச்சூழலில், தற்போது குடிநீர் தொட்டி ஆபத்தான முறையில் சாய்ந்து வருவதால், குடியிருக்கும் வீடுகளின் மீது விழக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆகையால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் பெருநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, குடிநீர் தொட்டியை முழுமையாக அகற்றிட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.