தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரம் காட்டிவருகிறது. இதனால் கரோனா தடுப்பூசி முகாம்கள், பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு தொற்றுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடுவதற்காக, தினந்தோறும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.
காஞ்சிபுரம் பெருநகராட்சி மற்றும் சபரிமலை சேவா சமாஜம் சார்பில், பெருநகராட்சி பகுதிக்கு உட்பட்ட குளக்கரை மாரியம்மன் ஆலயம் அருகே கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இங்கு காஞ்சி காமாட்சி சங்கரமட வரவேற்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் மாவட்ட தலைவருமான ஜீவானந்தம் ஏற்பாட்டின் பேரில் அப்பகுதியிலுள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
இந்நிலையில், இந்த முகாமினை காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர். இந்நிகழ்வில் குளக்கரை மாரியம்மன் ஆலய நிர்வாகி குமார், சுகுமார், பெருநகராட்சி மருத்துவர் வசந்த், பெருநகராட்சி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.