தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஜூலை12) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்கள், சிறு கடைகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டன.
மேலும், மாவட்டத்தின் முக்கிய சாலைகளான காந்தி ரோடு, காமராஜர் வீதி, நெல்லுக்கார வீதி, பஸ் நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் எதுவும் செல்லாமல் சாலைகள் வெறிச்சோடின. மாவட்டம் முழுவதும் இறைச்சிக் கடைகள், மீன் கடைகள் உள்ளிட்டவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், காஞ்சிபுரம் ரயில் நிலையம் பகுதியில் செயல்பட்டுவந்த மீன் மார்க்கெட் முற்றிலுமாக மூடப்பட்டது.
மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தினர்.
இதையும் படிங்க:சுகாதாரமற்ற கரோனா சிகிச்சை மையம்: ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதம்