காஞ்சிபுரம்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்குள்பட்ட களியாம்பூண்டி கிராமத்தில் சைல்ட் ஹெவன் இன்டர்நேஷனல் ஹோம் என்ற தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. இந்தக் காப்பகத்தில் 76 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இக்காப்பகத்தில் நேற்று 15, 14 வயதுடைய நான்கு பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கரோனா அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து இன்று அந்த நான்கு பேருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இவர்கள் நான்கு பேருக்கும் மானாமதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து அவர்கள் களியாம்பூண்டி கிராமத்தில் உள்ளசைல்ட் ஹேவன் இன்டர்நேஷனல் காப்பகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும் இன்று இந்தத் தனியார் காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது காப்பகத்தில் உள்ள குழந்தைகளிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.