காஞ்சிபுரம்: மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் இருநாள் அரசு பயணமாக நேற்று இரவு காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை உலகப்புகழ் பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்று, காமாட்சி அம்மனை தரிசனம் செய்தார். மேலும் காமாட்சியம்மனை தரிசிக்க வந்த அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பளிக்கப்பட்டு அம்பாளின் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
அதனையடுத்து மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது மாணவ - மாணவிகள் புதிய கல்வி பாடத்திட்டங்கள் குறித்து கேட்டு, அதற்கான விளக்கங்களைப்பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறுகையில், 'கல்வி நிறுவனங்களின் நுழைவுவாயிலில் பெரிய கண்ணாடியைப்பொருத்த வேண்டும். அதை மாணவர்கள் பார்க்கும்போதெல்லாம் அவர்களின் பல்வேறு அம்சங்களைப்பற்றி அறிந்து கொள்வார்கள். இது சுய நினைவை மேம்படுத்த உதவும்' என்று தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பு நிலை குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'இது தேசத்தின் பொதுவான நுழைவுத்தேர்வு, இது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும். இந்நுழைவுத் தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் பல்வேறு படிப்புகளுக்கு பல்வேறு கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதன்விளைவாக விண்ணப்பச்செயல்முறைக்கு மட்டுமே பெரும் பணம் செலவழிக்கப்படும். இதில் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் எந்த மருத்துவப் படிப்புகள் இருந்தாலும் பெறலாம்' என்றும் அவர் கூறினார்.
’மேலும் மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுதாமல் இருக்கவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கவலையில் இருந்து காப்பாற்றவும் அனைத்து பாடங்களுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வை நடத்திட மத்திய திட்டமிட்டு அது குறித்து அரசு யோசித்து வருகிறது.
நாட்டின் சிறந்த கல்வி குறித்து, புகழ்பெற்ற விஞ்ஞானி தலைமையிலான குழு மூலம் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை 2020ஐ மத்திய அரசு அறிவித்தது; புதிய கல்விக் கொள்கை மாணவர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உதவும்’ எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது பாஜக காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் , பள்ளி முதல்வர், தாளாளர், மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள் எனப் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'அப்பாவி இந்துக்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்; ஜெ. மீது மதிப்புள்ளவர்கள் பாஜகவை கைவிடுங்கள்'