காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் ஆய்வு குறித்தும், புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை பாா்வையிட்டார். பின்னா், வருவாய்த் துறை சாா்பில் 636 பயனாளிகளுக்கு ரூ. 3.26 கோடி மதிப்பிலும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்- மகளிா் திட்டம் மூலம் 11,702 பயனாளிகளுக்கு ரூ. 27.15 கோடி மதிப்பிலும் மொத்தமாக 15,910 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பால்வளத் துறை, பொதுப்பணித் துறை, தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ. 19.20 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, இந்துசமய அறநிலையத் துறை உள்ளிட்ட 16 துறைகளின் சார்பில் 18 ஆயிரத்து 279 பயனாளிகளுக்கு 134 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
மேலும், விழாவில் காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க்கதிா்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ரூ. 190.08 கோடி மதிப்பிலான 2,112 அடுக்குமாடி குடியிருப்புகளையும், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ரூ. 3.05 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களையும் திறந்து வைத்தார்.
இவை தவிர, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ. 4.50 கோடி மதிப்பில் செவிலியா் பயிற்சி பள்ளிக் கட்டடம், தலா ரூ. 25 லட்சம் என ரூ.1.50 கோடி மதிப்பில் 6 துணை சுகாதார நிலைய கட்டடங்கள், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் தலா ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் 19 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் உள்பட மொத்தம் 184 புதிய கட்டடங்கள் என மொத்தம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ. 742.52 கோடி மதிப்பில் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
கோவிந்தவாடி மற்றும் திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 22 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுதல், காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் நகா் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட வாா்டுகளில் தாா்ச்சாலை அமைத்தல், தலா ரூ. 23 லட்சம் மதிப்பில் 16 ஊராட்சி மன்றக் கட்டடங்கள் கட்டுதல், 106 ஊராட்சிகளில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் உள்பட 115 பணிகளுக்கு ரூ. 29.42 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்ட உள்ளார்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தைச் சேர்ந்த திட்ட பணிகளுக்கு ரூ. 742.52 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டல் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் தவறான கொள்கைகளே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் - பைலட் தாக்கு!