செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டமான அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டள்ளது. இத்திட்டத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பெஞ்சமின், "இத்திட்டத்தின் மூலம் உலகக்கோப்பை, மாநில அளவில் விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தினால் இளைஞர்கள் கவனத்தை வேறுவழியில் செலுத்துவதைத் தவிர்த்து விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினாலே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அடிப்படையாக அமையும். இத்திட்டத்தினைப் பயன்படுத்தி இளைஞர்களும், பெண்மணிகளும் பெரிய அளவில் தமிழ்நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், இத்திட்டத்தினை தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 526 ஊராட்சிகளிலும் 528 பேரூராட்சிகளிலும் தொடங்க உள்ளதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடி நகராட்சி கட்டடத்தில் நிலோபர் கபீல் ஆய்வு