காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (57). நெசவாளரான இவர், தனது உறவினரின் மகன் விஜயகவின் (13) என்ற சிறுவனை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, காஞ்சிபுரத்தில் இருந்து திருப்புட்குழி நோக்கி சென்றார்.
கீழ் அம்பி ஜங்ஷன் பகுதியில் சென்ற போது, வேலூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியார் நிறுவன பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
அதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மூர்த்தி தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த விஜயகவின் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர், உயிரிழந்த மூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஓட்டுநர் ஜெகன் (25) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.