சென்னை அணுமின் நிலையத்தின் மூலம் நல்லாத்தூர் கிராமத்தில் குழந்தைகள் மையம் கட்டடம் புதிதாக கட்டப்பட்டது. இந்த இடத்திற்கு அருகே கிராமத்திற்கு பொதுவான வாய்க்கால் ஒன்று பல வருடமாக இருந்து வந்தது. அதை சரியாக தூர்வாரப்படாததால் சாலை குறுக்கே கழிவுநீர் செல்வதற்காக குழாய்கள் புதைத்து அணைகட்டி சாலை அமைக்கப்பட்டது.
அதற்கு, அடியில் குடிநீர் தொட்டியிலிருந்து கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் எடுத்துச் செல்லப்பட்டு கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதில், குழாய் ஒன்று பழுதடைந்து குடிநீர் வீணாக வெளியேறிவருகிறது.
இதற்காக அப்பகுதி மக்கள் பல முறை அரசு ஊழியர்களிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பழுதடைந்த குழாயில் இருந்து வெளியேறும் நீரானது சாலை ஓரங்களில் தேங்கி நிற்பதால் அதில் நுண்ணுயிரிகள் உருவாகி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்நிலையில், அருகில் உள்ள குழந்தைகள் மையத்திலுள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் அப்பகுதி மக்கள் இதை உடனே சீர் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.