உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா அமைப்புகள் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
ஆனால், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமியர் தரப்பு வாதத்தை இன்றைக்குள் (அக்டோபர் 15ஆம் தேதி) நிறைவு செய்யவும், அடுத்த இரண்டு நாட்களில் இந்து கட்சிகள் தங்களின் வாதத்தை நிறைவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் 17ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுவதற்கு முன்பு, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அயோத்தி நிலம் தொடர்பாக சமரசம் செய்வதற்காக, மூன்று பேர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அக்குழுவில் ஒருவரான வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் காஞ்சிபுரத்தில் பிரபலமான வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் இன்று திடீரென வழிபாடு செய்தார்.
தமிழ்நாட்டில் இதற்கு முன்பு அரசியல் விஐபிக்கள் வழக்கு சம்பந்தமான நிகழ்வுகள் நடைபெறும் பொழுது காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் வந்து தஞ்சமடைவதை ஒரு வாடிக்கையாக வைத்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, டி ராஜேந்தர் என பல விஐபிக்களும் தங்களின் வழக்குகள் நடைபெறும் சமயத்தில் இந்தக் கோயிலில் வழிபாடு செய்துள்ளனர். அந்த வகையில் இன்று அயோத்தி வழக்கு தொடங்கிய நிலையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: