பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் திருவிழா நேற்றுமுன்தினம் காலை 6மணிக்கு தொடங்கியது. இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசம் செய்துள்ள நிலையில் அத்திவரதரை காண பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் 50ரூபாய் கட்டண வரிசை ரத்துச் செய்யப்பட்டு 48நாட்களும் பக்தர்கள் காலை 6மணிமுதல் பிற்பகல் 12மணிவரையிலும், பின்னர் மாலை 3மணி முதல் இரவு 8மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நாளை முதல் ரூ.500 கட்டண தரிசனம் தொடங்கப்படுவதாகவும், அதற்காண டிக்கெட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று பச்சை நிறை ஆடை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முதல் இரண்டு நாட்களை போல இன்றும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் முன்பு உள்ள வீடுகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.