காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் காட்சியளிப்பார். அதனைத் தொடர்ந்து இந்த வருடம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய சாமி தரிசனம் இன்று வரை தொடர்ந்தது. ஜூலை 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் நாளை முதல் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இது தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதையடுத்து இன்று மதியம் 12 மணிக்கு பொதுமக்கள் தரிசனம் செய்யும் கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்பட்டது.
பின்னர், கோயிலில் மிக சொற்பமான பக்தர்கள் இருந்ததால் காவல் துறையினர், பக்தர்கள் அனைவரையும் அழைத்து சாமி தரிசனம் செய்ய அனுப்பினார்கள். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இல்லை என்பதால் அனைவரும் ஐந்து நிமிடத்தில் சாமியை தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டனர்.
மேலும், 2059ஆம் ஆண்டில்தான் இதற்கு பிறகு அத்திவரதர் காட்சியளிப்பார் என்பதால் பக்தர்கள் பலர் காஞ்சிபுரத்தில் குவிந்துள்ளனர். பல லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரைக் காண குவிந்த வண்ணம் உள்ளனர். சயன கோலத்தில் சாமியை தரிசனம் செய்தவர்கள்கூட நின்ற கோலத்தில் அத்திவரதரை காண ஆவலுடன் உள்ளனர்.