காஞ்சிபுரம்: நடிகை ரோஜா, ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபின் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் அவர் பிரார்த்தனை செய்ய வருகை தந்துள்ளார். அதன்படி, சக்தி பீடங்களில் முதன்மையானவற்றில் ஒன்றானதும், உலக பிரசித்திப்பெற்றதுமான காஞ்சிபுரம் காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் இன்று (ஏப்.16) ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்களும், காமாட்சியம்பாளின் படமும் வழங்கப்பட்டது.
எனக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி: அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'ஆந்திர மாநிலத்தின் அமைச்சரவையில் இடம் கிடைத்ததற்கு தனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தாய் வீடான ஆந்திராவில் எனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க பிரார்த்தனை செய்தார்கள். அதேபோல், தமிழ்நாடு எனக்கு மாமியார் வீடு. இங்கேயும் எனக்காக அனைவரும் பிரார்த்தனை செய்தார்கள்.
அதற்காக, அனைவருக்கும் நன்றி. நான் முதல் படம் நடித்தது முதல் தற்பொழுது வரை ஆண்டுதோறும் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்வேன். என்னோட வேண்டுதலை காமாட்சி அம்பாள் நிறைவேற்றியுள்ளார். அதற்குப் பிரார்த்தனையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று நான் பிரார்த்தனை செய்ய உள்ளேன்.
தமிழ்நாடு எனக்கு மாமியார் வீடு: எந்த ஒரு காரியம் செய்தாலும் காஞ்சி காமாட்சி அம்மனை வணங்கிய பின்பு தான், நான் தொடங்குவேன். எனது தாய் வீடான ஆந்திர மக்களுக்கும், எனது மாமியார் வீடான தமிழ்நாட்டு மக்களுக்கும், நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலினைச் சந்தித்த நடிகை ரோஜா!