காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலை பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலையாகும். ஆகையால், எப்போதும் வாகன ஓட்டிகள் அதிகளவில் நிறைந்து காணப்படும்.
இந்நிலையில், வையாவூர் சாலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென சாலையின் வலது பக்கம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செல்ல முற்படும்போது, அவரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், தனது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி சாலையில் விழுந்தார். இதில் அந்நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து அங்கே இருக்கக்கூடிய சிசிடிவியில் பதிவானது. இவ்விபத்து நடந்து முடிந்த சிறிது நேரத்தில், அதே இடத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது கண்மூடித்தனமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மோதியதில், இருவரும் சாலையில் கீழே விழுந்தனர். இதில் முதியவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குறிப்பிட்ட அந்த இடத்தில் மின்சார கம்பம் காற்றினால் சற்று சாய்ந்த நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு மின்சார கம்பம் சாய்வது போல் ஒரு பிம்பம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, நிலைதடுமாறி ஒருவர் பின் ஒருவராக குறிப்பிட்ட அந்த இடத்தில் சாலை விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட இடத்தில் நடந்த விபத்துகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.