காஞ்சிபுரம்: வையாவூர், அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்னும் மனைவியும், 9ஆம் வகுப்பு படிக்கும் பவித்திரன், 7ஆம் வகுப்பு படிக்கும் நத்தகுமார்(13) என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் வையாவூர் அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவன் நந்தகுமார், இன்று (மே 04) மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, இடியுடன் கூடிய கனமழையானது பெய்தது.
இதனையெடுத்து வீட்டிற்குச் சென்ற பள்ளி மாணவன் நந்தகுமார் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் வயல்வெளியில் இடியுடன்கூடிய மழையில் நனைந்தவாறு இருந்துள்ளதைக்கண்டு அக்கால்நடைகளை அழைத்து வரச்சென்றுள்ளார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென இடி தாக்கி நிகழ்விடத்திலேயே பள்ளி மாணவன் நந்தகுமார் கீழே விழுந்துள்ளார்.
பின்னர், பள்ளி மாணவனின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் பேச்சு மூச்சின்றி இருந்த நந்தகுமாரை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது பள்ளி மாணவன் நந்தகுமார் இடி தாக்கியதில், ஏற்கெனவே, உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காஞ்சி தாலுகா போலீசார், இடி தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
7ஆம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவன் நந்தகுமார், மழையில் நனைந்துக்கொண்டிருந்த கால்நடைகளை அழைத்து வரச்சென்றபோது எதிர்பாராத விதமாக இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருச்சி அருகே இடி தாக்கி இருவர் உயிரிழப்பு