காஞ்சிபுரம் மாவட்டம், நெமிலி அருகேயுள்ள பீமந்தங்கள் பகுதியைச் சேர்ந்தவர் லோகிதாஸ் (48). இவர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆவார்.
விபத்து
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச்சாவடி அருகே செல்வம் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் லோகிதாஸ் சென்ற போது, சாலையின் குறுக்கே கடக்க முயற்சித்தார். அப்போது, பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக லோகிதாஸின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஒருவர் உயிரிழப்பு
இதில், லோகிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த செல்வம் படுகாயமடைந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், லோகிதாஸின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காகவும், செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காகவும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஓட்டுநர் கைது
அங்கு செல்வத்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிந்து கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவடியில் பைக் மீது வேன் மோதி விபத்து - பொறியாளர் உயிரிழப்பு!