காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிகுட்பட்ட பூக்கடைச்சத்திரம் அருகே உள்ளது செங்கழுநீரோடை வீதி. இப்பகுதியில் பிரபல தனியார் பால் நிறுவனத்தின் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையம் இயங்கி வருகிறது.
காலை 5மணி முதல் இரவு 10மணி வரை இந்த விற்பனை நிலையம் இயங்கி வருவது வழக்கம். கடந்த வெள்ளிக் கிழமையான 20ந் தேதியன்றும் வழக்கம் போல் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
விற்பனை நிலைய விநியோகஸ்தர் எத்திராஜ் என்பவர் பணி நிமிர்த்தமாக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் விற்பனை நிலையத்தை அங்கு பணியாற்றும் ஊழியர்களே அன்று கவனித்து வந்தனர். அவர்கள் விற்பனை முடிந்ததும் அன்றிரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், அன்றைய தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மர்ம நபர்கள் 5 பேர் திடீரென விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதை அருகில் வசிக்ககூடிய 15 வயது சிறுவன் பார்த்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போதிலும் அச்சிறுவன் மிக சாதூர்யமாக சிந்தித்து உடனடியாக காவல்துறையின் அவசர உதவி எண் 100-ஐ தொடர்பு கொண்டு அது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
அதன் பின் அச்சிறுவன் தனது செல்போனில் கொள்ளையர்கள் விற்பனை நிலையத்திலிருந்து வெளியில் வருவதையும் வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும், அங்கு போலீசார் வருவதற்குள்ளாகவே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர் சிவகாஞ்சி காவல்துறையினர், விற்பனை நிலையத்தின் உரிமையாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்து கடையில் மேற்கொண்ட சோதனையில் ரூபாய் 2 இலட்சத்து 43 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பிட்டிருப்பது தெரியவந்தது.
இதனையெடுத்து கொள்ளையர்களின் அடையாளங்கள் குறித்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அதன் அடிப்படையில் சிவ காஞ்சி காவல் ஆய்வாளர் சுந்தராஜன் தலைமையில் போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து காஞ்சிபுரம் மாநகர பகுதிகள் முழுவதும் வலைவீசி தேடினர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து சிசிடிவி கேமரா காட்சியை விழிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த போலீசார், நெல்லுகாரத்தெரு பகுதியிலுள்ள ஓர் பெட்ரோல் பங்கின் அருகே மர்ம நபர்கள் 5பேர் நின்று கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக போலீசார் தங்களது வாக்கி டாக்கி மூலம் தகவல் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிலையில், உடனடியாக அங்கு சென்ற சிவகாஞ்சி காவலர் இளங்கோவை கண்டதும் மர்ம நபர்கள் ஐந்து பேரும் தப்பி செல்ல முயன்ற நிலையில், காவலர் இளங்கோ மர்ம நபர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழே விழச் செய்துள்ளார்.
பின்னர், அதில் ஒருவரை மட்டும் காவலர் இளங்கோ தனது காலில் இடுக்கி பிடித்த நிலையில் மீதமிருந்த மர்ம நப்ரகள் காவலர் இளங்கோவை மறைத்து வைத்திருந்த பட்டாகத்திகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். அதனையும் பொருட்படுத்தாத காவலர் அவரை இறுக பிடித்தபடி மர்ம நபர்களுக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது அடுத்தடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசாரை கண்டதும் உயிர் தப்பினால் போதுமென பிடிபட்ட சக மர்ம நபர்கள் நால்வரும் இருசக்கர வாகனத்தில் சிட்டாக பறந்து சென்றுள்ளனர்.
இதனையெடுத்து போலீசராரிடம் பிடிபட்ட அந்த மர்ம நபரை காவல்நிலையம் அழைத்து சென்று அவரிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அவர் பெயர் பிரேம் குமார், வயது (20) என்பதும், சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
பால் விற்பனை நிலையத்தில் நள்ளிரவு நடைபெற்ற கொள்ளை சம்பவத்தினை அறங்கேற்றியதும், பெட்ரோல் பங்க்கிலும் கொள்ளையடிக்க ஈடுபட முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் படி 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் காலை 21ந்தேதியன்று சிவகாஞ்சி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே நின்று கொண்டிருந்த சென்னை அன்னை சத்யா நகரை சேர்ந்த ஜோசப்(19) என்கிற மற்றொரு கொள்ளையனையும் அதிரடியாக சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
மேலும், இவர்கள் ஐவரும் கொள்ளையடித்த பணத்தில், பங்கு பிரித்து வைத்திருந்த 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாயையும் சிவ காஞ்சி போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளை சமப்வத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் மூவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.
15 வயது சிறுவன் ஒருவன் கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து போலீசாருக்கு உதவிடும் வகையில் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கும் செயல் அனைவரிடத்திலும் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
அதேபோல் உயிரை பணையம் வைத்து கொள்ளையர்களை எப்படியாவது பிடித்திட வேண்டும் என்பதற்காக தனது யுக்தியை பயன்படுத்தி கொள்ளையர்களின் இருசக்கர வாகனத்தில் மோதி கொள்ளையன் ஒருவனை காவலர் ஒருவர் பிடித்த செயலும் அனைவரிடத்திலும் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
மேலும், பெட்ரோல் பங்க்கில் இருந்து கொள்ளையர்கள் அடுத்த கொள்ளை குறித்து திட்டம் தீட்டி கொண்டிருந்த போது காவலர்கள் அவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கொள்ளையனை பிடித்ததும், பட்டாகத்திகளை கொண்டு காவலரை தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சடலத்தை எடுத்து செல்லும் ஊர்மக்கள்...