காஞ்சிபுரம் : மாகரல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சித்தாலப்பாக்கம் ஜங்ஷன் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கத் துறை மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையில் நேற்று நள்ளிரவில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பொலிரோ சிட்டி பிக் அப் வாகனத்தை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் காய்கறிகள் கொண்டுச்செல்ல பயன்படுத்தும் காலிப்பெட்டிகளை அடுக்கி வைத்து அதற்கடியில் 48 பாட்டில்கள் அடங்கிய 60 பெட்டிகளில் மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அதனை காவல் துறையினர் சோதனை செய்ததில் அவை அனைத்தும் போலி மதுபான பாட்டில்கள் என்றும் இதனுடைய சந்தை மதிப்பு நான்கு லட்சம் ரூபாய் எனவும் தெரியவந்தது.
அதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த பாலமுருகன் என்பவரை கைது செய்த காவல் துறையினர், வாகனம் மற்றும் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2ஆயிரத்து 880 போலி மதுபானங்கள் ஆகியவற்றை காஞ்சிபுரம் கலால் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரபல சாராய வியாபாரி சுருட்டல் மணி மற்றும் அவருடைய மகன் மோகன்ராஜுக்கும் இவ்விவகாரத்தில் தொடர்புள்ளது என தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகர் ராஜ் பப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!