காஞ்சிபுரம் மாவட்டம், கைலாஷ் கார்டன் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, பெரிய காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற இரண்டு இளைஞர்கள் காவல் துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை மடக்கிப் பிடித்து காவல் துறையினர் சோதனையிட்டபோது, இளைஞர்களிடம் சுமார் ஒன்றரைக் கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
விசாரணையில் அவர்கள் கைலாசநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வத்தின் மகன் தீபக்ராஜ் (19), கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தணிகைமலையின் மகன் சின்ராஜ் (18) என்பதும், 16 வயது சிறுவன் ஆந்திர மாநிலத்திலிருந்து கிலோ கணக்கில் கஞ்சாவை வாங்கி வந்து இளைஞர்களுக்கு விநியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது.
பின்னர் காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இளைஞர்கள் செங்கல்பட்டு கிளைச் சிறையிலும், சிறுவன் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கஞ்சா செடிகளை கண்டறிய ட்ரோன் கேமரா