காஞ்சிபுரம்: சென்னை அண்ணாநகர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் அலுவலகம் அமைத்து 15-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது விஜிபி குழுமம். இதில் மிக முக்கியமாக நிலங்களை விலை கொடுத்து வாங்கி அவற்றை வீட்டுமனை பட்டாக்களாக பிரித்து அரசு அனுமதி பெற்று விற்பனை செய்வதை மிக முக்கிய வியாபாரமாக செய்து வருகின்றனர்.
இக்குழுமத்தின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் வட்டத்தில் நெமிலி, வடகால் மற்றும் ஆயக்குளத்தூர் பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் கிரையம் பெற்றதுடன், அதில் விஜிபியின் பல பெயர்களைக் கொண்ட வீட்டு மனைகள் பிரிவுகள் உருவாக்கியது.
பின்னர், அவற்றை டிடிசிபியின் அப்ரூவல் பெறப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டது. இந்த டிடிசிபி அப்ரூவல் பெறுவதற்கு வீட்டுமனை உருவாக்கப்பட்ட பகுதிகளில் பொது உபயோகத்திற்கு, அந்த கிராம ஊராட்சிக்கு குறிப்பிட்ட இடத்தினை, தானமாக கிரையம் செய்து அளிக்கவேண்டும்.
அவ்வகையில் ஆயக்குளத்தூர் பகுதியில் ஊராட்சிக்கு அளிக்கப்பட்ட சுமார் 28 ஏக்கர் நிலத்தினை, ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் பெயரில் ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதேபோல், நெமிலி கிராமத்தில் போடப்பட்ட வீட்டுமனை பிரிவுகளுக்காக பொது உபயோகத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தானமாக அரசிற்கு பதியப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்ற நிலங்களை வி.ஜி.எஸ் அமலதாஸ் ராஜேஷ், சார்பதிவாளருடன் கூட்டு சேர்ந்து தானமாக வழங்கப்பட்ட இடங்களை ரத்து செய்து அதை விற்பனை செய்துள்ளனர். இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால், பால் நல்லூர் , வல்லம் ஆகிய பகுதிகளில் தொழில் நோக்கங்களுக்காக எடுக்கப்பட்ட நிலங்களையும் இதற்காக அரசிடம் பணம் பெற்றுள்ளனர். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிப்பட்டு சார் பதிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் தான நிலங்களை ரத்து செய்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்று சட்டவிரோதமாக தானம் அளித்த நிலங்களை ரத்து செய்த பள்ளிப்பட்டு சார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ராஜதுரை, காஞ்சிபுரம் எண் 2 இல் இணை சார்பதிவாளராக பணிபுரிந்த சுரேஷ், ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளராக பணியில் இருந்த ரவி ஆகிய 3பேர் ஊராட்சி ஒன்றிய ஆணையரின் போலி கையொப்பத்துடன் அளித்து, தடையில்லா சான்று கோரியதிற்கு உடந்தையாக செயல்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசார் விஜிஎஸ் அமலதாஸ் ராஜேஷ்,சார் பதிவாளர்கள் சுரேஷ் மற்றும் ரவி ஆகியோரை கைது செய்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர்களிடம் சான்று பெற்று பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்பட்ட விஜிஎஸ் அமறதாஸ் என்பவர் பிரபல விஜிபி குழுமத்தினை சேர்ந்த வி.ஜி.சந்தோஷ் என்பவரின் மகன் ஆவார். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக வீட்டு மனை பிரிவு போடப்பட்டு தற்போது பல்வேறு சாலை, புதிய தொழிற்சாலை பணிகளுக்காக நிலங்களை அரசு கையகப்படுத்தும் போது அதிகளவில் பணம் கிடைக்கும் என மோசடி செய்து விற்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் இருக்கும் என தெரியவருகிறது.
இதையும் படிங்க: கும்பகோணம் பள்ளி தீ விபத்து... 18ம் ஆண்டு நினைவு நாள்! பெற்றோர் கண்ணீர் அஞ்சலி...