காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பஜாரில் மங்கல் மொபைல் ஷாப் நடத்திவருபவர் போலேராஜ். இவர் நேற்றிரவு (ஆக. 08) வழக்கம் போல் இரண்டு ஊழியர்களுடன் கடையில் வியாபாரம் செய்துவந்தார்.
அப்போது கடையில் ஆள் இல்லாத நேரமாக பார்த்து, செல்போன் வாங்குவது போல் நான்குபேர் உள்ளே நுழைந்தனர். திடீரென பையிலிருந்து பட்டா கத்தியை எடுத்துக் கடை உரிமையாளர் போலேராஜ் உள்ளிட்ட மூன்று பேரையும் அச்சுறுத்தி கடையில் அமரவைத்து 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 செல்போன்கள், கல்லாவில் இருந்த பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனையடுத்து கடையின் உரிமையாளர் போலேராஜ் இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் துறையினருக்கு புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்றவர்கள், கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய பஜார் பகுதியில் பட்டா கத்தி முனையில் செல்போன் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 4 லட்சம் மோசடி