காஞ்சிபுரம்: திண்டுக்கல்லை சேர்ந்த 18 வயதுடைய ராஜபாண்டி என்பவரும் அவருடைய தம்பியான 12 வயதுடைய கவுசிக் என்பவரும், நேற்று (பிப். 28) மாலை காஞ்சிபுரம் ஆவின் பாலக நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், கவுசிக் என்ற சிறுவனை வலுக்கட்டாயமாக தூக்கி வாகனத்தில் அமர வைத்துக்கொண்டு, அவரது அண்ணன் ராஜபாண்டியிடம், ஒரு லட்ச ரூபாய் பணத்தை அளித்துவிட்டு உனது தம்பியை அழைத்துச் செல் என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளார்.
பேருந்தை விட்டு இறங்கிய சிறுவன் கூச்சலிட்டதால் பொதுமக்கள் திரண்டு அந்த நபரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. ராஜபாண்டியிடம் பொதுமக்கள் விசாரித்த போது, தனக்கு சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை என்றும், தான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு குடும்ப வறுமை காரணமாக 3 வருடங்களுக்கு முன்னதாக காஞ்சிபுரம் அடுத்துள்ள காரை பகுதியில் உள்ள நொறுக்குத் தீனி நிறுவனத்தை நடத்தி வரும் இளையராஜா என்பவரிடம் வேலைக்கு சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது குடும்பத்தார் இளையராஜாவிடம் வாங்கிய கடனை வேலை செய்து அடைத்து விட்டதாக கூறிய ராஜபாண்டியன் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக 12 வயதுடைய தனது தம்பி கவுசிக் என்பவரையும் இளையராஜா தனது நிறுவனத்தில் பணிக்கு அழைத்து வந்து வைத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, தனது தாயின் உடல்நிலை சரியில்லாததாலும் தனது தம்பி இங்கே வேலை செய்வது பிடிக்காததாலும் இவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதாக சொன்னபோது முதலாளி இளையராஜா அனுமதி மறுத்ததாகவும், இதனால் அங்கிருந்து தப்பி வந்து திண்டுக்கல் செல்ல முயன்ற தங்களை கண்டுபிடித்து, ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால்தான் தம்பியை அனுப்புவேன் என்று மிரட்டி, தம்பியை தூக்கிச் சென்று விட்டார் என்றும் கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், ராஜபாண்டியிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு சம்பந்தப்பட்ட இளையராஜாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அதன் பின்னர் ராஜபாண்டி, கவுசிக் இருவரையும் மீட்டு காப்பகம் ஒன்றுக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்களின் பெற்றோர் உட்பட அனைவரையும் விசாரித்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஏடிஎம் கொள்ளை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்