காஞ்சிபுரம்: புத்தேரி கிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா. ரஜினிகாந்த் - லதா தம்பதிக்கு 3 மகள்கள். முதல் மகள் பூஜா கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் தனிஷியா காஞ்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் வழியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
தனிஷியா பிளஸ் 1 வகுப்பில் ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ஆங்கில பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்று வருவதாக ஆசிரியர் கண்டித்துள்ளனர். மேலும், பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வர வேண்டும் என ஆசிரியர் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த தனிஷியா மாலை வீட்டுக்கு சென்றவுடன், வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
பணி முடிந்து வீட்டுக்கு சென்ற லதா, வீட்டின் அறையை திறந்து பார்த்தபோது, தனிஷியா இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். பின்னர் உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தனிஷியாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தற்கொலை என்பதால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் தாலுகா போலீசார், தனிஷியா உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவி தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரது பெற்றோர் மற்றும் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்ட அறையில் சோதனை செய்தனர். அப்போது, மாணவிக்கு வழக்கமாக டைரி எழுதும் பழக்கம் இருப்பது தெரிய வந்தது. அதில், மாணவியின் கடிதம் கிடைத்துள்ளது. அதில், ஆங்கிலம் பேச, எழுத சரியாக வராததால் வகுப்பறையில் சக மாணவிகளின் முன்னிலையில் ஆங்கில ஆசிரியர் திட்டியதாகவும், ஆரம்பத்திலிருந்து சரியான ஆங்கிலப் பள்ளியில் படித்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டு இருக்காது என்று குறிப்பிட்டுள்ளது. ஆங்கிலம் சரிவர எழுத படிக்க வரவில்லை” என உருக்கமாக எழுதியுள்ளது தெரியவந்துள்ளது. டைரியை கைப்பற்றி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: துணிவு திரைப்படத்தின்போது அஜித் ரசிகர் மரணம் - தாயார் கமிஷனர் ஆபிஸில் புகார்!