காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் 108 அவசர ஊர்தி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு மார்பு வலியால் துடித்த, ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்த கன்னியம்மாள்(75) என்ற பெண் மற்றும் அவருக்கு உதவியாக வந்த அவரது மகள் சரஸ்வதி ஆகியோருடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து, 108 அவசர ஊர்தி மூலம் மேல் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு சென்றுள்ளார்.
ஆத்தூர் என்ற பகுதியில் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற தனியார் பேருந்தின் மீது மோதியதில், 108 ஓட்டுநர் ஜெயக்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மருத்துவ உதவியாளர் தினகரன், சிகிச்சை நோயாளி கன்னியம்மாள், சரஸ்வதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், நோயாளி கன்னியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த அவருடைய மகள் சரஸ்வதியும், மருத்துவ உதவியாளர் தினகரனும் மேல் சிகிச்சைக்காகச் சென்னை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு தாலுகா காவல் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவசர ஊர்தியின் பிரேக் செயலிழந்ததால், விபத்து நேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போது பிரேக் பிடிக்கவில்லை என இஎம்டி நிர்வாகத்திடம் தகவல் அளித்தும் அவர்கள் இந்த குறைபாட்டைச் சீர் படுத்தாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.