கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது மேட்டுநன்னாவரம் கிராமம். இந்தக் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஆறுமுகம் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் நித்யஸ்ரீ திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பன்னிரண்டாம் வகுப்பும், மூன்றாவது மகள் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இதனிடையே நோய் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டும், ஆன்லைன் மூலம் தற்போது வகுப்புகள் நடத்தப்பட்டும் வரும் நிலையில், ஆறுமுகத்தின் மூன்று மகள்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஏழை விவசாயியான ஆறுமுகம் 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து தனது மூன்று மகள்களையும் ஒரே செல்போனில் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் சகோதரிகள் மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்ததால், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி பயில முடிந்துள்ளது.
இதனால் அவரது மகள்கள் தங்களுக்கு தனித்தனியே ஆண்ட்ராய்டு செல்போன்கள் வாங்கிக் கொடுக்க வேண்டுமென ஆறுமுகத்திடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஆறுமுகத்தின் பொருளாதார சூழல் அதற்கு ஒத்துப்போகவில்லை. இதனால் விரக்தியடைந்த மூத்த மகள் நித்தியஸ்ரீ, நேற்று முன்தினம் 29ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியுள்ளார். தொடர்ந்து, வயலில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்து ஆறுமுகம் பார்த்தபோது நித்யஸ்ரீ மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், அருகில் இருந்த உறவினர்கள் உதவியோடு நித்யஸ்ரீயை உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார். அங்கிருந்து தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நித்யஸ்ரீ கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் இருந்துவந்த நித்யஸ்ரீ, இன்று (ஆக. 31) திங்கட்கிழமை பகல் 11 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொற்று காரணமாக பள்ளிகளும் கல்லூரிகளும் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டதால், ஆறுமுகம் குடும்பத்தினர் போன்ற ஏழை எளியவர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன்கள் மூலம் ஆன்லைன் கல்வியைப் பெறுவது பெரும் சுமையையே தருகிறது.
ஏற்கனவே தொலைக்காட்சிகள் மூலம் தமிழ்நாடு அரசு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், ஆன்லைன் கல்வி பயில முடியாததால் மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விசிக ஆர்ப்பாட்டம்!