கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைப் பகுதியில் காவலர் வேடமிட்டு வழிப்பறி கொள்ளையில் சிலர் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து காவல் துறையினர் எம்.எஸ். தக்கா சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் காவலர் வேடத்தில் வந்த நபரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் கஜேந்திரன் என்பவர் உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, திருநாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நின்றுகொண்டிருந்த பொதுமக்களிடமும் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களிடமும் காவலர் எனக் கூறி பணம் பறித்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப்பதிந்து அவரை கைதுசெய்து அவரிடமிருந்து 32 ஆயிரம் ரூபாய், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் தனது மகளின் திருமணக் கடனை அடைக்க காவலர் வேடம் அணிந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.