கள்ளக்குறிச்சி: உலகப்புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் திருநங்கைகளுக்கான சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் திருநங்கைகள் பலர் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா சாகை வார்த்தலுடன் தொடங்கியது.
இந்த திருவிழா கடந்த ஏப்.5ஆம் தேதி சாகை வார்த்தல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு இன்று (ஏப்.19) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் கேரளா மாநிலம்,ராஜஸ்தான் மாநிலம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
இதில் அரவாண் என்னும் தெய்வத்தை கணவராக ஏற்றுக்கொண்டு, தங்களை மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர். பின்பு, இரவு முழுவதும் கும்மியடித்து ஆடி, பாடி மகிழ்வார்கள். இதனைத் தொடர்ந்து, நாளை புதன்கிழமை (ஏப்.20) காலை திருத்தேரோட்டம் நடைபெறும். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டதால் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவே விழாக்கோலம் பூண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமான பணிப்பெண்ணாக ஆசை - 'மிஸ் கூவாகம்' மெகந்தி