கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஊழியர்கள் 28 பேர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் நெற்றியில் நாமம் போட்டு கையில் திருவோடு ஏந்தி நூதனப் போராட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ’ஃபாஸ்ட் டேக்’ முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இதுவரை மனிதர்கள் மூலம் வசூலிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடி கட்டணங்கள், தற்போது வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் உதவியுடன் நேரடியாக வங்கி கணக்கில் இருந்தே பணம் பிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த 28 ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதைக் கண்டித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர், 17ஆவது நாளாக இன்றும் உடலில் பட்டை நாமம் போட்டு, கையில் திருவோடு ஏந்தியபடி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் காரல்மார்க்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"வடமாநில தொழிலாளர்களின் வரத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம் எங்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டுத் தருவது மாநில அரசு கடமையாகும் எனவே மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் எங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும்.
கையில் திருவடி ஏந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் உடனடியாக பணி அமர்த்த பட வேண்டும்" என்கிற கோரிக்கை முன்வைத்தார்.
இதையும் படிங்க: தரமற்ற முறையில் போடப்பட்ட சாலை ; இருமுடி கட்டி தலையில் சுமந்து பொதுமக்கள் நூதனப்போராட்டம்