கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கடுவனூரில் மருத்துவப் படிப்பு படிக்காமல் மருந்தகம் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் கள்ளக்குறிச்சி மருத்துவ ஆய்வாளர் கதிரவன் தலைமையில் ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபாலன், மருத்துவ அலுவலர்கள் கீதா பாலாஜி உள்ளிட்டவர்கள் கடுவனூரில் செயல்பட்டுவந்த மருந்தகத்தைச் சோதனைசெய்தனர்.
அப்போது அதில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மருந்துக் கழிவுகள் இருந்ததைக் கைப்பற்றினர். மேலும் அவர்களிடமிருந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துப் பாட்டில்கள், ஊசிகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விசாரணையில் கணேசன் என்பவர் கணேஷ் என்ற மருந்தகத்தையும், சக்திவேல் என்பவர் சக்தி மருந்தகத்தையும், ராமச்சந்திரன் என்பவர் என்.ஆர். மருந்தகத்தையும் நடத்திவந்தது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று மருந்தகங்களின் உரிமையாளர்களும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து சங்கராபுரம் காவல் துறையினர் மூன்று பேரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.