கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கூட்டுச் சாலையில் எஸ்.எஸ்.பி. (SSB) என்ற பெயரில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக அறிவித்தது.
அதற்கு முன்பணமாக ரூ. 6 ஆயிரம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய கிராம மக்கள், நிறுவனத்தில் பணத்தைக் கட்டியுள்ளனர். அந்த வகையில், அவர்கள் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, பணம் செலுத்தியவர்கள் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி காவல் துறையினர் புதுக்கோட்டையைச் சேர்ந்த வேதிதிரி, தஞ்சாவூரைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரையும் தீவிரமாகத் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் நடத்திவந்த நிறுவனத்தை இருவரும் பார்வையிட வரும்போது காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் இதைப் போல் பல மாவட்டங்களில் மோசடிசெய்து ஆடம்பரமாக வாழ்ந்துவந்துள்ளது தெரியவந்தது.
மேலும், ரூ. 8 லட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாகவும் தெரிவித்தனர். அவர்களிமிருந்து ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனம், ரூ.60 ஆயிரம் பணத்தைக் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவியை கர்ப்பமாகிய நபர் மீது புகார்