கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏமம் கிராமம் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்த ஜாக்கின்ஜெரால்ட் (28). இவர் வீடு கட்ட செங்கல் கொண்டு வருவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவரின் டாட்டா ஏசி வாகனத்தை வாடகைக்கு பேசியுள்ளார். செங்கல்லை இறக்கிவிட்டு பிரசாத் அதற்கு ரூ.700 வாடகை தருமாறு ஜாக்கின் ஜெரால்டிடம் கூறியுள்ளார்.
ஆனால் ஜாக்கின்ஜெரால்ட் 600 ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் . அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் கோபம் அடங்காத பிரசாந்த் எப்படியாவது ஜாக்கினை அடிக்க வேண்டும் எனத் திட்டம் திட்டியுள்ளார். இதற்காக பிரசாந்தின் தாய் மாமன் அரசன், அவரது நண்பர்கள் இணைந்து ஜாக்கி ஜெரால்ட் வீட்டுக்குச் சென்று அவரை அரிவாளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜாக்கி ஜெரால்ட் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் . இதுகுறித்து ஜாக்கின்ஜெரால்ட் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.