கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 110-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த சுங்கச்சாவடியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், அங்கு பணியாற்றிய ஊழியர்களில் 28 பேரை பணி நீக்கம் செய்து, அவர்கள் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தக் கோரியும், உடன் பணி புரிந்த இதர ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர். ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால், உங்களையும் பணி நீக்கம் செய்ய நேரிடும் என சுங்கச்சாவடியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் போராட்டம் நடத்தி வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், தங்களின் 54 நாட்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று (நவ.24) காலை முதல் பணிக்குத் திரும்பினர். தங்களின் பணிப் பாதுகாப்பு கருதி, ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிகிறது.
அதே நேரத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட 28 ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளராக யோகிபாபு.. வைரலாகும் புகைப்படம்!