நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு மழை, வறட்சி காலத்தில் நிவாரணம் வழங்கும் கிசான் திட்டத்தினை 2018ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதன்படி ஒவ்வொரு ஏழை விவசாயிக்கும் தலா இரண்டாயிரம் என மூன்று தவணையாக ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் வரை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போலியான சர்வே எண்களைக் கொண்டு, இடைத்தரகர்கள் 1000 ரூபாய் பெற்று பல்வேறு நபர்களை கிசான் திட்டத்தில் ஆன்லைன் மூலம் பதிவுசெய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, தியாகதுருகம் உள்ளிட்ட இடங்களில் முறைகேடு செய்த உதவி வேளாண் இணை இயக்குநர்கள் அமுதா, ராஜசேகரன் ஆகியோரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் 13 தற்காலிக ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் புகாரால் ஆன்லைனில் கிசான் திட்டத்தில் பதிவுசெய்யும் முறையும் நிறுத்திவைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மணலூர் பேட்டை பகுதியில் அதிக அளவில் முறைகேடு ஆன்லைனில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கிடைத்தது. இதை அடுத்து இரண்டு நெட் சென்டர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் சிவச்சந்திரன், வேளாண் அலுவலர் ராஜா ஆகியோர் சீல்வைத்தனர்.
இதுகுறித்து திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் சிவச்சந்திரன் கூறும்போது, "ஆன்லைன் மூலமாகப் பதிவுசெய்த இன்னும் சில நெட் சென்டர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டுவருகின்றன. அவைகளும் விரைவில் சீல்வைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொன்னமராவதியில் தகுந்த இடைவெளி இல்லாத கடைகளுக்கு சீல்