கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து (45). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று தனிக்குடித்தனம் உள்ளனர். பிள்ளைகளுடனே சித்ரா வசித்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மருதமுத்து மட்டும் தனியாக வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 8) காலை மருதமுத்துவின் மகள் பூவரசி தந்தையைப் பார்க்க வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் மருதமுத்து ஆடைகள் கலைந்து நிர்வாணமாகக் கிடந்துள்ளார்.
இதைப் பார்த்த மகள் தந்தை குடிபோதையில் இருப்பதாக எண்ணி அக்கம்பக்கத்தினரிடம் தந்தையை எழுப்பிவிடுமாறு கூறியுள்ளார். அதன்படி அக்கம்பக்கத்தினர் மருதமுத்துவின் அருகில் வந்தபோது அவர் ரத்தக் காயத்துடன் இறந்துகிடந்தது தெரியவந்தது.
![வீட்டில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்த நபர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-klk-01-chinnaselam-murder-image-maruthamuthu-tn10026_08032021142919_0803f_1615193959_259.jpg)
உடனே இது குறித்து கீழ்குப்பக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மருதமுத்துவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மருதமுத்து சமீபத்தில் தனது நிலத்தை விற்று ஒரு பெரும் தொகை கையில் வைத்திருந்தார் என்றும், அந்தத் தொகையைப் பங்கிடுவது சம்பந்தமாக மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு இடையே பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மருதமுத்துவின் இறப்பு காவல் துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணத்திற்காக மருதமுத்து கொல்லப்பட்டரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமநாதன், சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் குருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.