கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குள்பட்ட திருவெண்ணெய்நல்லூர் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு கீரியம்மன் கோயிலில் பொது குடிநீர் கிணறு உள்ளது. ஆண்டுதோறும் ஆடி திருவிழாவிற்காக இந்தக் கிணற்றிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக மின்மோட்டார் மூலம் நீர் எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 1) அதிகாலை அந்தப் பகுதியில் இரவு நேர குற்றப்பிரிவு காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு கும்பல், ஒரு டாட்டா ஏசி வாகனத்தில் நீர்மூழ்கி மோட்டார், மின் கம்பிகளை எடுத்துச்செல்வதைக் கண்டறிந்தனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது, அந்தக் கும்பலில் இருந்த இருவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். மற்றவர்கள் தப்பிச் சென்றனர். பிடிபட்ட இருவரிடம் காவல் துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர்கள் உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டவர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், முருகேசன், சதாசிவம், வடிவேல், தெய்வசிகாமணி ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் இரவு நேரங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. மேலும், இவர்கள் பொறியியல் பட்டதாரிகள் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நான்கு பேர் மீதும் திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 13 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த பஸ் டிரைவர் கைது!