கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையத்தை சேர்ந்தவர் சமீர் அஹமத். ஆரம்ப காலத்தில் ஆட்டோ ஓட்டுநராக மூரார்பாளையம் மற்றும் சங்கராபுரம் பகுதியில் வலம் வந்தார். சமீர் அஹமத் வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தால், சென்னையில் உள்ள ஓர் நிறுவனத்தில் சேர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து தன்னை போலவே பலரை ஊக்குவித்து முதலீடு செய்ய வைத்து அதற்கும் பரிசாக தங்கம் வென்றார்.
சென்னையில் டிரேடிங் மூலம் தான் சம்பாதித்த பணத்தை போன்று அதிக லாபம் சம்பாதிக்க நினைத்த சமீர், முரார்பாளையத்தில் ஒரு நிதி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலமாக அவருக்கு அதிகப்படியான வருவாய் கிடைக்கவே பொதுமக்கள் முன் உயர் ரக கார்களில் வலம் வருவது, 10க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள், 5க்கும் மேற்பட்ட உதவியாளர் மற்றும் ஒரு டீ குடிக்க புதுச்சேரி, டிபன் சாப்பிட சென்னை, மதிய உணவு சாப்பிட கோயம்புத்தூர் செல்வது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
தன் சொந்த ஊரான முரார்பாளையம் கிராமத்தில் ஆரம்பித்த கம்பெனிக்கு பல ஏஜென்டுகளை சேர்த்து அவர்களுக்கு என்ஃபீல்டு பைக், ஆப்பிள் மொபைல் ஃபோன், கோட் சூட் போன்றவற்றை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் பலரை முதலீடு செய்யும் வகையில் திட்டத்தை வகுத்து பெரிய கோடீஸ்வரன் போல் தோற்றம் அளித்துள்ளார்.
இதனை நம்பிய பொதுமக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தங்களது சொத்துகளை அடகு வைத்து சமீர் கம்பெனியில் முதலீடு செய்தனர். 1 லட்ச ரூபாய் கொடுத்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகவும், ஆண்டு முழுவதும் மாதம் ஒரு லட்சம் என 12 லட்சம் கொடுத்தால் 24 லட்சமாக கொடுக்கப்படும் என கூறி பலரை முதலீடு செய்ய வைத்துள்ளார்.
சிலருக்கு மாதம் 15,000 ரூபாயை நான்கு முதல் 5 மாதங்கள் வரை சமீர் கொடுத்துள்ளார். அதை பார்த்து ஏமாந்த மக்கள் தனி நபராக 70 லட்ச ரூபாய் வரை கொடுத்துள்ளனர். இந்நிலையில் காரில் செல்வதால் முதுகு வலி வருகிறது என்றும், அதனால் ஹெலிகாப்டர் வாங்க சென்னை செல்வதாக கூறி சமீர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் சென்னைக்கு வந்த சமீர், சென்னையில் திரைப்படம் ஒன்றை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது படத்தில் நடிக்க வைப்பதற்கு நடிகைகளை அணுகியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் பணத்தை முதலீடு செய்த அனைவரும் பணத்தைத் திரும்பிக் கேட்கவே, அவர்களிடமிருந்து தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார் சமீர்.
தொடர்ந்து பணம் கொடுத்த பொதுமக்கள் சமீரைத் தொடர்பு கொண்டு கேட்டால், கட்டுக்கட்டாக பணம் இருப்பதை வீடியோவாக எடுத்து சிவாஜி படத்தில் வருவது போல அவர்களுக்கு அனுப்பி, உங்கள் பணம் பத்திரமாக இருக்கிறது, வட்டியுடன் திரும்ப கிடைக்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் மூரார்பாளையம் பகுதி ஏஜென்டுகள் சென்னையில் உள்ள தனியார் கார் விற்பனையகத்தில் இருந்த சமீரை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
அங்கு 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்ததால் சங்கராபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வந்து விசாரணை நடத்தி சமீரை கைது செய்தனர். சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கு திரண்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோசடி பணத்தில் எவ்வாறு செலவு செய்தார் எனவும், வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்புள்ளது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வருமான வரித்துறை சோதனை தேவையற்றது - அமைச்சர் எ.வ.வேலு