கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தச்சமூலை தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான மூதாட்டி. இவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் மே 14ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் அவரது உடலை திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் புதைக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது அப்பகுதி மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை இங்கு புதைக்கக் கூடாது எனவும், அவ்வாறு புதைத்தால் குடிநீரில் கரோனா தொற்று கலந்துவிடும் என்கிற அச்சத்தில் அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் ஆகியோர் கரோனவால் இறந்தவரின் உடலை ஆற்றின் கரையில் அடக்கம் செய்வதன் மூலம் குடிநீர் மாசு ஏற்படாது எனவும், கரோனா தொற்று பரவாது எனவும் எடுத்துரைத்தனர்.
அலுவலர்கள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் உடலை அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, பாதுகாப்பாக மூதாட்டியின் உடலை அடக்கம் செய்தனர்.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் காவலர் உயிரிழப்பு